Sunday 4 August 2013

தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.

சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.

9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நாட்டில் நல்லவை நடக்கும்.

10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.

11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.

12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.

13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.

14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.

15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.

17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.

18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.

25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.

27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.

29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.

30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.

31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.

32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.

34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.

35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.

36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும் ; எந்தத் திட்டமும் நிறைவேறும்.

38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.

39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனிதற்கொண்டு விமர்சியுங்கள்.

40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.

42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.

43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.

44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.

45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.

50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

52. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.

56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.

58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.

60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.

64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.

65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.